அமெரிக்காவில் இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்

கலிபோர்னியா: டிச.23-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரில் எழுதிவைத்த கோஷத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
கலிபோர்னியாவின் நேவார்க் நகரில் சுவாமிநாராரயண் கோயில் உள்ளது. அதில் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவில் இதுபோல் இந்து கோயிலில் வெறுப்புப் பிரச்சாரம் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல. அண்மையில் கனடாவில் இதுபோல் இந்து கோயில்களில் இதுபோல் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டன.
சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி அமெரிக்கா, கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.அமெரிக்காவின் குற்றச்சாட்டு: காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தற்போது அவர் அறிவித்துள்ளார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.