அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

அமலாபுரம்: டிசம்பர் . 28 – அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மினி வேனும் டிரக்கும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஆந்திர ஆளும் கட்சி எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலத்தின் மும்மிடிவரம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பி. வெங்கட சதீஷ்குமார். இவரது உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு எம்எல்ஏவின் உறவினர்களான பி.நாகேஸ்வர ராவ், இவரது மனைவி சீதா மகாலட்சுமி மற்றும் லோகேஷ், நவீனா, க்ருதிக், நிஷிதா உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று முன்தினம் டெக்சாஸில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.
டிரக் மோதல்: பிறகு இவர்கள் அனைவரும் அங்கிருந்து உயிரியல் பூங்காவுக்கு சென்று விட்டு மாலையில் தங்கள் வீட்டுக்கு மினி வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இவர்களின் மினி வேன் மீது எதிரில் வந்த டிரக் வேகமாக மோதியது. இதில் நாகேஸ்வர ராவ், அவரது மனைவி சீதா மகாலட்சுமி, நவீனா, க்ருதிக், நிஷிதா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
3 பேர் படுகாயம்: இவர்களது குடும்பத்தை சேர்ந்த லோகேஷ் மற்றும் டிரக்கில் வந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து டெக்சாஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரக் தவறான திசையில் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொந்த ஊரில் இறுதிச் சடங்கு: இறந்தவர்களின் உடல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் ஆந்திராவில் உள்ள அவர்களின் சொந்த ஊரான அமலாபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, இங்கேயே இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எம்எல்ஏ வெங்கட சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தால் எம்எல்ஏவின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.