அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்கிறார்

வாஷிங்டன்: அக். 17- இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் நடந்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இதனால், இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தீவிர தரைவழித் தாக்குதல் நிறுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் பயணத்துக்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கொலராடோ பயணத்தை பைடன் ஒத்திவைத்துள்ளார்.
எச்சரிக்கையைத் தொடர்ந்து பயணம்: ‘‘இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்லவிருக்கிறார். அவரது இஸ்ரேல் பயணம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
2800 பேர் பலி: கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம்இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 11வது நாளாக போர் நடக்கும் சூழலில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,859 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதேபோல டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட 37 மருத்துவ ஊழியர்கள் இறந்துள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரைவழித் தாக்குதல்: காசாவில் 141 சதுர மைல் (365 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் உள்ள பகுதியில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முனைப்புடன் முன்னேறி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் முயற்சியாக இதனை இஸ்ரேல் கருதுகிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கன் அதிபர் பைடன் இஸ்ரேல் செல்வதை உறுதி செய்துள்ளார். இதனால் பேரழிவை ஏற்படுத்தும் தரைவழித் தாக்குதல் தவிர்க்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் உள்ள 23 லட்சம் மக்கள் மின்சாரம், சுகாதார வசதிகள், தண்ணீர், போதிய உணவின்றி தவிக்கின்றனர்.