அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பால் உச்சகட்ட குழப்பம்

புதுடெல்லி: ஜூலை 31 இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியா எங்கள் நண்பர். எனினும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.ஏனெனில், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும், எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர்.
ராணுவ உபகரணங்கள்: உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளது. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் அல்ல.
எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆக. 1-ம் தேதி (நாளை) முதல் 25 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உங்களது கவனத்துக்கு நன்றி. மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் (MAGA) இவ்வாறு அந்தப் பதிவில் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
தாமதமின்றி அமலுக்கு வரும்: இதற்கிடையே, உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகள் 2025 ஆகஸ்ட் 1 முதல் தாமதமின்றி அமலுக்கு வரும் என்று அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக்கும் உறுதிபடுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது. “இலக்கு வைக்கப்பட்ட நாடுகளுக்கு ஆக.1 முதல் புதிய வரிகள் அமலுக்கு வரும். கால நீட்டிப்பு, சலுகை காலங்கள் இனி இல்லை. எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவை நடைமுறைக்கு வரும். சுங்கத் துறை, பணத்தை வசூலிக்கத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.