
ஜூன் 9 அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், கலிபோர்னியா ஆளுநர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து முக கவசம் (மாஸ்க்) அணிந்த பலர் தொழில் பூங்காவுக்கு எதிரில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது.
இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்களை (தேசிய படையினர்) போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை. பிறரின் தூண்டுதலின் பேரிலும் பணம் வாங்கிக் கொண்டும் நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிய தடை விதிக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது” என கூறியுள்ளார்.போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டி உள்ளார். மேலும் அவருடைய நடவடிக்கை மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.