அயோத்தி வால்மீகி விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானம்

புதுடெல்லி: ஜன. 1புனித நகரமான அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததில் இருந்து அங்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. டெல்லியில் இருந்து அயோத்திக்கு முதல் விமான சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. திறப்புவிழா முடிந்தவுடனேயே டெல்லியிலிருந்து அயோத்திக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானத்தின் கேப்டன் ஆஷுதோஷ் சேகர், பணிகளை வரவேற்றுக் கூறுகையில், அயோத்திக்குச் செல்லும் இந்த விமானத்தை கட்டுபடுத்தும் பொறுப்பு தனக்குக் கிடைத்ததில் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார். மேலும், இண்டிகோ நிறுவனம் இந்த முக்கியத்துவம் பெற்ற சேவையை அளித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது இண்டிகோவுக்கும் எங்களுக்கும் சந்தோஷமாக உள்ளது. உங்களது பயணம் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என நம்புகிறேன் என்று பயணிகளிடம் சேகர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஆஷுதோஷ் சேகர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டார். இதன்பின் பயணிகளும் அதேபோல் கோஷமிட்டனர். ஆஞ்சநேயர் மந்திரங்களும் பயணிகளால் ஜெபிக்கப்பட்டன. இண்டிகோவின் இந்த முதல் விமானத்தில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அயோத்தியை தரிசனம் செய்யப் போவதில் நாங்கள் பரவசம் அடைந்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்துள்ளோம். ராம் லல்லாவை தரிசித்து அவரது ஆசிர்வாதங்களைப் பெறுவோம் என்றார். மற்றொரு பயணி கூறுகையில், எங்கள் வாழ்வில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். ராமர் பிறந்த பூமியில் இந்த விமானநிலையம் அமைந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.