அயோத்யில் ராமர் சிலையை மோடி நிறுவுகிறார்

மும்பை, மார்ச் 17-
அயோத்தி கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ இருப்பதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகி கூறினார். ராமர் கோவில் கட்டும் பணி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தானேக்கு வந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் அயோத்தி கோவில் கட்டுமான பணிகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- ராமர் சிலை பிரதிஷ்டை கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கோவிலில் ராமர் குழந்தை பருவ சிலை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 3-வது வாரத்தில் பிரதமர் மோடியின் கையால் பிரதிஷ்டை செய்யப்படும். கோவில் கட்டுமான பணிகளுக்கும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம்.
சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகும் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறும். அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் கோவில் கருவறை, முதல் தளம், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.