அரசியல் காழ்ப்புணர்ச்சியால் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை, ஜூலை.22- ‛‛அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்,” என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தனர். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் சென்னை, கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 23 இடங்கள் மற்றும் பெருங்களத்துார், மேற்கு மாம்பழத்தில் உள்ள அவரது உதவியாளர்கள் வீட்டிலும் லஞ்சஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக அமைச்சர் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும். ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்