அரசு சாதனை விழாக்கள் ரத்து

பெங்களூர்: ஜூலை. 28 –
பி ஜே பியின் டெல்லி தலைவர்கள் அறிவுறுத்தலின்படி முதல்வர் பசவராஜ் பொம்மை அரசின் சாதனை மாநாடு மற்றும் ஜனோத்சவாவை ரத்து செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு வகையான வியூகங்களுக்கு காரணமாகியுள்ளது. ஒருவருக்கு பின்னர் மற்றொருவர் என ஹிந்துக்களின் கொலையால் வெறுப்படைந்துள்ள கட்சி மேலிடம் பிரவீன் நட்டாரு கொலைக்கு பின்னர் மாநிலத்தில் அரசியல் நிலைமைகள் குறித்து அறிக்கை பெற்று ஜனோத்சவாவை ரத்து செய்யுமாறு அறிவுறுத்திய நிலையில் பொம்மை தலை வணங்கி அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவோடு இரவாக ரத்து செய்ய வேண்டியதாயிற்று. பி ஜே பி தொண்டர் பிரவீன் கொலைக்கு பின்னர் மாநிலத்தின் கடலோர பகுதி கட்சி தொண்டர்கள் தங்கள் பதவிகளை ராஜனாமா செய்ய முற்பட்டுள்ள நிலையில் விழித்து கொண்ட கட்சி மேலிடம் அரசின் ஜனோத்சவா நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியிருப்பதுடன் ஆட்சி குறித்து அக்கறை காட்டுமாறு அறிவுறுத்தியுள்ளது. சிவமொக்காவில் ஹர்ஷாவின் கொலை இன்னும் ஈரம் காயும் முன்னரே பிரவீன் கொலை நடந்துள்ளது. இதுவே ஹிந்து ஆதரவு இயக்கங்களை ஆத்திரமூட்டியிருப்பதுடன் இவை அனைத்து குறித்தும் அறிந்த கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.. கட்சி மேலிடத்தின் நம்பிக்கையை இழந்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மையை மாற்றும் நேரம் கூடி வந்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தலைமை மாற்றம் உறுதி என விதான் சௌதா வளாகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது . தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் பி ஜே பி தொண்டர் பிரவீன் நெட்டாரு கொலை மாநிலம் முழுக்க பி ஜே பி கட்சியினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மாநில அரசின் சாதனை மாநாடு ஜனாதசோவா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பி ஜே பி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைந்துள்ள நிலையில் இன்று விதான சௌதா மாநாட்டு அறையில் அரசு நிகழ்ச்சி மற்றும் தொட்டபள்ளாபூராவில் பி ஜே பி சார்பாக ஜனோத்சவா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பி ஜே பி தொண்டர் பிரவீன் கொலை நடந்துள்ள நிலையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஹிந்து இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாநிலம் மற்றும் மத்தியில் பி ஜே பி ஆட்சிகள் இருந்தும் எதுவும் நடக்க வில்லை என பிரவீன் கொலையுண்ட உடனேயே பி ஜே பி தொண்டர்கள் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். பல மாவட்டங்களில் பி ஜே பி யின் இளைஞர் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் ராஜீனாமாவும் அளித்துள்ளனர். இந்த அனைத்து வளர்ச்சிகளையும் தெரிந்து கண்ட மேலிடம் இத்தகைய நேரத்தில் விழாக்கள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று முடிவுக்கு வந்து சாதனை மாநாட்டை ரரத்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.