அரசு பஸ் மோதியதில் பைக் ஓட்டுநர் பலி

பெங்களூரு, பிப். 13: கர்நாடக அரசு பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
பெங்களூரு யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை ஸ்கூட்டர் மீது கேஎஸ்ஆர்டிசி பேருந்து மோதியதில் 54 வயது கணக்காளர் உயிரிழந்தார்.
பலியானவர் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யஷ்வந்த்பூர் போக்குவரத்து போலீசார் கூறுகையில், நாகசந்திராவை சேர்ந்த இவர் மேக்ரி சர்க்கிள் அருகே உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் நோக்கி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
“எங்களிடம் சிசிடிவி காட்சிகள் இல்லை. ஆனால் பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து மெட்ரோ நிலையத்தின் கீழ் இடதுபுறமாக சிறிது நகர்ந்து ராஜேந்திரனின் ஸ்கூட்டரின் கைப்பிடியில் மோதியதாக நேரில் பார்த்தவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.
ராஜேந்திரன் தனது ஸ்கூட்டரில் இருந்து விழுந்து, பேருந்தின் இடது பின் சக்கரத்தால் சுமார் 25 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் பேருந்தை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். ஐபிசி 279 மற்றும் 304ஏ பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது பதிவு செய்துள்ளனர். ராஜேந்திரனுக்கு மனைவியும், கல்லூரி செல்லும் மகனும் உள்ளனர்.