அரண்மனை 4 மற்ற பாகங்களை விட வேற மாதிரி இருக்கும் -சுந்தர் சி

சென்னை, ஏப்ரல் 1- சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விழாவில் பேசிய சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படம் மற்ற பாகங்களைப் போல இல்லாமல் வேற மாதிரி திரைப்படமாக இருக்கும் என்றார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை.
இந்த படம் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து 2016ம் ஆண்டு அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. இதில், சித்தார்த், த்ரிஷா, கோவை சரளா, சூரி என பலர் நடித்திருந்தார்கள். இந்த படமும் வெற்றி பெற்றதால், 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. அதில், ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் இந்த படம் சுமாராகத்தான் ஓடியது.
சுந்தர் சியின் அரண்மனை 4: தொடர்ந்து அதே அரண்மனை பேய் என அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருந்ததால், மூன்றாம் பாகம் மக்கள் மனதில் நிற்காமல் தோல்விப்படமாக அமைந்தது. இதையடுத்து, சுந்தர் சி மீண்டும் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அரண்மனை 4 டிரைலர்: இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது, அதில், சுந்தர்.சியின் தங்கையான தமன்னாவின் மர்ம மரணம். அவரின் மரணத்துக்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் முந்தைய படத்தில் இருந்த அதே அரண்மனையில் பேய், பேயை விரட்ட தீர்வு சொல்லும் சாமியார் என வழக்கமான அதே விஷயமே படத்தில் இருப்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.