அரவிந்த் கெஜ்ரிவால்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: ஏப். 10:
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமற்றம் தள்ளுபடி செய்ததை தெடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாைலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தது. தற்போது கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவிக்க முடியாது என்று கூறி கெஜ்ரிவாலின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார். இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட்டை சந்தித்து இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.