அரவிந்த் கெஜ்ரிவால் பிரமாண்ட பேரணி

புதுடெல்லி,மே 11
ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை பிரமாண்ட வாகன பேரணி நடத்துகிறார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைக்கு வெளியே அவரை மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.கட்சியின் கொடி மற்றும் சின்னமான துடைப்பங்களுடன் ஏராளமான தொண்டர்களும் திரண்டு கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர்.
திறந்த காரில் நின்று கொண்டு அவர்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால் கூறியதாவது:-
சர்வாதிகாரத்துக்கு எதிராக எனது முழு பலத்துடன் போராடுகிறேன். ஆனால் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நாட்டின் 140 கோடி மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.உங்களுடன் இருப்பதற்கு பெருமை அடைகிறேன். சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.உங்கள் அனைவருக்கும் நன்றி. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆசியை எனக்கு வழங்கி இருந்தனர். நான் இங்கே இருப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கும் நன்றி.இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார். சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப்முதலமைச்சர் கலந்து கொள்கிறார்
கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தும் கெஜ்ரிவால், பகல் 1 மணியளவில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததை மாநிலம் முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாமாக கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிற டி-ஷர்ட்டுகளை அணிந்து குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் மேளம் இசைத்தும், நடனமாடியும் கொண்டாடினர்.