அரியலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி பலி

அரியலூர்: அக்.9- நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பட்டாசு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் பட்டாசு குடோன்களிலும் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வானவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் அரியலூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டாசுகள் வெடித்துக்கொண்டுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆலையில் பலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.