அரியவகை பறவைகள், விலங்குகள் கடத்தல்

வீட்டில் அரிய அலெக்சாண்ட்ரின் கிளிகளை வளர்த்ததுடன், அதுகுறித்து அப்பாவித்தனமாக வீடியோ வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் ரூ.2½ லட்சம் அபராதத்துக்கு உள்ளானார். ஆனால் அவரைப்போல நாடெங்கும் ஏராளமானோர், குற்றம் என்று அறிந்தோ, அறியாமலோ அரிய வகை விலங்குகள், பறவைகளை தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாய் வளர்த்துவருகிறார்கள். அவற்றை வாங்கவும், பராமரிக்கவும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்பது வெளியே அதிகம் தெரியாத ஆச்சரியம். இந்த வித்தியாச விலங்கு நேசர்களை குறிவைத்தே இந்தியாவில் ஒரு கருப்புச்சந்தை கனஜோராக இயங்கிவருகிறது. வெளிநாடுகளில் இருந்து விசித்திர பாம்புகள் முதல் பிரமாண்ட பல்லிகள் வரை ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பனவற்றை சில கும்பல்கள் சர்வசாதாரணமாக தருவித்து விற்பனை செய்துவருகின்றன. அண்மைக்காலமாக விமான நிலையங்களில், கடத்தப்பட்டு வந்த அரியவகை விலங்கினங்கள் பிடிபட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவருவது இந்த பின்னணியில்தான். அதிலும் இதுபோன்ற விலங்குகள், பறவைகளின் முக்கிய கடத்தல்வழிகளில் ஒன்றாக சென்னை விமான நிலையம் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சி செய்தி. ‘இந்த வகை’ கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே விமான நிலைய அதிகாரிகள் தனி கூட்டம் போட்டு விவாதித்திருப்பது, நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும். தற்போது, தங்கம், போதைப்பொருள் கடத்தலுடன் போட்டிபோடுகிறது, அரிய உயிரின கடத்தல். ஓராண்டுக்கு உலகளவில் நடக்கும் ‘வனவிலங்கு வர்த்தகத்தின்’ மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
ஆனால் ஒருபுறம் இந்த உயிரினங்களுக்கான கிராக்கி வெகுவாக அதிகரித்திருப்பதால், சென்னை, ஐதராபாத், மும்பை, புனே, பெங்களூரு என்று பெருநகரங்களில் இவற்றை விற்கும் நிழல் சந்தைகளும், சட்டவிரோத கடைகளும் பெருகியிருக்கின்றன. ஒரு காலத்தில் அரிய உயிரினங்களின் கடத்தல்வழியாக இருந்த இந்தியா, தற்போது இவை வந்தடையும் இறுதி இடமாக மாறியிருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். பாம்பு, பல்லிகளை எடுத்துச் செல்வது எளிது என்பதால் அவைதான் அதிகம் கடத்தப்படுகின்றனவாம். கடத்தல்காரர்களிடம் இருந்து யாரும் இந்த உயிரினங்களை நேரடியாக வாங்கிவிட முடியாது. அவை பல வட்டங்களை தாண்டித்தான், வளர்ப்போரை வந்தடைகின்றன. இந்த ‘தொழிலில்’ கணிசமான லாபம் கிடைப்பதால், வாங்கி சிறிதுகாலம் வளர்த்துவிட்டு, பின்னர் அவற்றை நல்ல விலைக்கு விற்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் கல்லூரி மாணவர்களும் உண்டு. அதிசய விலங்கினங்களை வளர்ப்பவர்கள், விற்பவர்கள், வாங்கி வளர்த்துவிட்டு மீண்டும் விற்பவர்கள் ஆகியோர் அந்த உயிரினங்களுடன் எடுத்த படங்கள், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் கொட்டிக்கிடக்கின்றன. ‘நம் நாட்டில் அரிய உயிரினங்களின் கடத்தல், விற்பனையை கட்டுப்படுத்துவதுடன், அதுகுறித்து விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும். வெளிநாட்டு விலங்குகளை வளர்க்கத் தெரியாமல் வளர்ப்பதும் அவற்றுக்கு இழைக்கப்படும் கொடுமைதான்’ என்கிறார்கள் உண்மையான பிராணி நல ஆர்வலர்கள்.

https://www.dailythanthi.com/News/State/endangered-species-increasing-bird-animal-trafficking-920700