அரியாணா துணை முதல்வரின் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி

புதுடெல்லி, நவ. 7- ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால், அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஹரியாணா முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா. ஹரியாணாவில் கடந்த 2019 தேர்தலின்போது ஜேஜேபி கட்சியை தொடங்கி, 10 தொகுதிகளில் வென்றார். இதையடுந்து அமைந்த, பாஜக – ஜேஜேபி கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் ஜேஜேபி கட்சியினர் நேற்று வரை 22 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.ஜேஜேபி தலைவர் துஷ்யந்த், ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். அவரது ஜாட் சமூக மக்கள் ராஜஸ்தானில் கணிசமாக உள்ளனர். பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவான இந்த சமூகத்தினரின் வாக்குகள், ஜேஜேபி.க்கும் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக ராஜஸ்தானில் போட்டியிடும் இக்கட்சியில், காங்கிரஸ் மற்றும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முக்கியத் தலைவர்கள் இணைந்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தையும் நம்பியுள்ள காங்கிரஸ், பாஜகவிற்கு இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், ராஜஸ்தான் தேர்தலில் ஜேஜேபி.க்கு ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே. எனினும், தோல்வி ஏற்பட்டாலும் தம் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் கருதுகிறார்.
ஒருவேளை ஓரிரு தொகுதிகள் கிடைத்தால் தம் கட்சிக்கு ராஜஸ்தானில் கால் பதிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் உள்ளது.
சமீப ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஆளும் கட்சி தொடர்ந்து மறுமுறை ஆட்சி செய்யவில்லை. இச்சூழலில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் அக்கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் ஓரிரு தொகுதிகளாவது பெற்று, ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து பலன் அடைய துஷ்யந்த் சவுதாலா திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.