அரிய சிலைகள் மீட்பு

கும்பகோணம்,நவ. 24 – கும்பகோணத்தில் 200 ஆண்டுகள் பழமையான மௌனசாமி மடத்தின் நிர்வாகிகள் பழங்காலத்து உலோக சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் இந்து அமைப்பினர் அண்மையில் புகார் அளித்திருந்தனர்.புகாரின் பேரில் இந்த சிலைகளை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் எஸ்.இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுகளுடன் இன்று காலை அந்த மடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த சிலைகள் குறித்து உரிய ஆவணங்களை கேட்டபோது, அங்கிருந்த நிர்வாகிகள் சமர்ப்பிக்கவில்லை.
இதனையடுத்து, உலோக சிலைகளான 23 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்ட நடராஜர் சிலை, 14 செ.மீ. உயரமும், 5 செ.மீ. அகலமும் கொண்ட திருவாச்சியுடன் கூடிய சிவகாமிதேவி சிலை, 11 செ.மீ. உயரமும், 8.5 செ.மீ. அகலமும் கொண்ட திருவாச்சி மற்றும் பீடமும் கொண்ட விநாயகர் சிலை, 37 செ.மீ. உயரமும், 16 செ.மீ. அகலமும் கொண்ட பாலதண்டாயுதபாணி சிலை, 144 செ.மீ. உயரமும், 115 அகலமும் கொண்ட 63 நாயன்மார்களின் தஞ்சாவூர் லீலா ஓவியங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டது. இச்சிலைகள் மற்றும் ஓவியத்தை, கும்பகோணம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலைகள் எந்தக் கோயிலில் திருடப்பட்டது என அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சிலைகளை மீட்ட போலீஸாரை சிலை கடத்தல் பிரிவு டி.ஜி.பி. கே.ஜெயந்த்முரளி, ஐ.ஜி டி.ஆர்.தினகரன் ஆகியோர் பாராட்டினர்.