அருண் கோயல் ராஜினாமாவால் மக்களவை தேர்தலுக்கு தடை இல்லை

புதுடெல்லி, மார்ச் 11- தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவால், மக்களவை தேர்தலுக்கு தடை இல்லை’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தெரிவித்துள்ளார். தமிழரான இவர் 1966-ம் ஆண்டு பேட்ச்சின் குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி. அருண் கோயல் ராஜினாமா குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியில் என்.கோபால்சாமி கூறியதாவது: கடந்த 1985-ம் ஆண்டு பேட்ச் பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அருண் கோயல், தேர்தல் ஆணையர் பதவியை திடீரென ராஜினாமா செய்ததின் பின்னணி என்ன? – இதுதொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியானதாகத் தெரியவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் 2025-ல் முடிகிறது. அவருக்கு பின் அப்பதவியை ஏற்று டிசம்பர் 2027-ம் ஆண்டு வரை பணியில் இருக்கும் வாய்ப்பு அருண் கோயலுக்கு உள்ளது. ஆனால், அவர் தனது ஐஏஎஸ் பதவியை கடந்த 2022 நவம்பர் மாதம் ராஜினாமா செய்து உடனடியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 1950-ல் உருவான தலைமை தேர்தல் ஆணையத்தில் இதுபோல் ஒரு முக்கிய உயரதிகாரி திடீரென பதவியை ராஜினாமா செய்ய முடியுமா? – இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 324-ல் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் உள்ள நிலையில் மக்களவை தேர்தல் நடத்துவது சாத்தியமா? – இச்சட்டத்தின் பிரிவு 324(2) இன்படி, தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் சாத்தியமே. தற்போதுள்ள சட்டப்படி, பல்வேறு நிலைகளில் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்கள், வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, தேர்தல் பணியை மேற்பார்வையிட வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள், தேர்தல் அத்துமீறல்கள் குறித்து எடுக்கும் நடவடிக்கையில் சிக்கியவர்கள் அல்லது புகார்கள் குறித்து மட்டுமே தலைமை தேர்தல் ஆணையர் நடவ டிக்கை எடுக்க வேண்டி இருக்கும். இதற்காக ஆணையருக்கு உதவ தேர்தல் ஆணையத்தில் சில மூத்த அதிகாரிகள் துணை ஆணையர்களாக உள்ளனர். மக்களவை தேர்தல் என்பது பெரிய அளவில் நடத்துவதில் ஒருவகையில் சிக்கல்தான். அதில், ஆணையத்தின் சட்டதிட்டங்களை மிகச்சரியாக கையாண்டால் தேர்தலை நடத்துவது மிகவும் எளிது. அப்படி எனில், அருண் கோயல் ராஜினாமா, மக்களவை தேர்தல் நடப்பதிலோ, தேதி அறிவிப்பதிலோ தடையாக இருக்காதா? – நிச்சயமாக எந்த தடையும் இருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற நிலை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதல்ல. இதற்குமுன், ஒரு தேர்தல் ஆணையர் இல்லாமையால் கடந்த 1999 மற்றும்2009-ம் ஆண்டுகளில் மக்களவைதேர்தல் 2 ஆணையர்களால் நடத்தப்பட்டது. அப்போதைய தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் முடிந்ததால் அப்படி நடந்தது.