அரூர் பகுதியில், கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

அரூர், ஜன.13-
அரூர் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் 3 போக விளைச்சல் நடைபெற்று வந்தது. தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் சிலர் மட்டும் ஒரு போக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் நீப்பத்துறை, கீழ்செங்கப்பாடி, பையர்நாயக்கன்பட்டி நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சூரநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் அறுவடை பணியை மேற்கொள்ள முடியமால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- கடந்த வாரம் பெய்த மழை, சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த ெநற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்தன. மேலும் வயல்களில் மழைநீர் தேங்கியதால் கதிர் அறுக்கும் எந்திரம் மற்றும் கூலி ஆட்கள் மூலம் அறுவடை பணி மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்து
வழக்கமாக ஏக்கருக்கு 40 மூட்டை நெல் கிடைக்கும். தற்போது மழை பாதிப்பு காரணமாக 15 மூட்டை நெல் தான் கிடைக்கும் என தெரிகிறது. இதனால் கடும் நஷ்டம் ஏற்படுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் நேரில் பாதிப்பை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.