அழுகிய பெண் சடலம் – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது

பெங்களூர் : மார்ச். 16 – நகரின் விஸ்வேசரய்யா ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் 13 அன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குறித்த அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் காதலனும் உட்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ரயில்வே போலீசார் பெண்ணின் விவரம் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை எனினும் கொலை செய்யப்பட்டுள்ள பெண் நகரின் கலாசிபால்யாவில் வசித்துவந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த தமன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. கணவனை பிரிந்து இவர் தற்போது சந்தேகத்துக்குரிய கொலையாளியிடம் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடநத மார்ச் 12 அன்று மூன்று பேர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒரு ஆட்டோவில் நீல நிற ட்ரம்முடன் வந்தவர்கள் அந்த ட்ரம்மை நகரின் குளிர் சாதன வசதிகள் கொண்ட விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தின் தானியங்கி வாயிலின் அருகில் வைத்து விட்டு தப்பியோடிய நிலையில் போலீசார் ஆட்டோ எண்ணை கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பெண் 48 மணிநேரத்திற்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நகரின் ரயில்வே நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களில் கண்டெடுக்கப்பட்ட மூன்றாவது கொலை விவகாரமாகும் . ஆனால் இந்த மூன்று கொலைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.