அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்ததை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை, ஜூலை . 20 –
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி வானகரத்தில் நடந்தது. அதேநேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். இதனால், அப்பகுதியே போர் களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு பிறப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.