அ.தி.மு.க.,பிரமுகர் வேன்கள் தீக்கிரை ; தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு


துாத்துக்குடி, ஏப்.4-
விளாத்திகுளம் அருகே தேர்தல் மோதலில் அ.தி.மு.க.,பிரமுகருக்கு சொந்தமான 3 வேன்களுக்கு கும்பல் தீ வைத்தது. கோவில்பட்டியில் ஒரு பரோட்டா கடையை அடித்துச்சேதப்படுத்தினர்.
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஜெகவீரபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவர் புதுார் யூனியன் சேர்மனும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான சுசீலா தனஞ்செயனின் உறவினர். தாஸ்க்கு சொந்தமான 4 வேன்கள் தேர்தலில் அ.தி.மு.க.,வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்களை ஏற்றிவர பயன்படுத்தி வந்தார். இதனால் ஆத்திரமுற்ற தி.மு.க.,வினர் தாசை தாக்கினர். நேற்று இரவில் அவரது 3 வேன்களுக்கும் தீ வைத்தனர். இதில் ஒரு வேன் முற்றிலுமாக தீக்கிரையானது.
கும்பல் தாக்கியதில் காயமுற்ற தாஸ், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காடல்குடி போலீசார், ஜெகவீரபுரம் ஊராட்சி தலைவரும் தி.மு.க.,பிரமுகருமான அழகுபாண்டி உள்ளிட்ட 4 பேர் கும்பல் மீது வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர். தகவல் அறிந்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் அங்கு வந்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
ஓட்டல் சேதம்..!
இதனிடையே கோவில்பட்டியில் வேறு இரு தரப்பினர் மோதலில் ஒரு அசைவ ஓட்டலை கும்பல் அடித்துசேதப்படுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.