ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

பெங்களூரு, செப்.11-சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக விழித்துக்கொண்ட பெங்களூரு மாநகராட்சி, ராஜ கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.
21,963 சதுர அடி ஆக்கிரமிப்பு கட்டிட உரிமையாளர்களுக்கு எந்த நோட்டீசும் வழங்காமல் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர் மழையால், சர்ஜாபூர் மற்றும் பெலந்தூர் ரெயின்போ காலனி வெள்ளத்தில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முறையான வடிகால் வசதியின்றி சாலைகள் மற்றும் பேரங்காடிகளில் 3 முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால், கடந்த 10 நாட்களாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு எவ்வித அறிவிப்பும் வழங்காமல் பிபிஎம்பி அதிகாரிகள் வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
ராஜ கால்வாய் ஏரிகள் மற்றும் அவற்றின் மண்டலங்கள் நகரின் புறநகரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் 34 இடங்களில் 21,963 சதுர அடி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இதில் குடியிருப்பு வீடுகள், தற்காலிக கொட்டகைகள், வளாகம் மற்றும் காலி நிலம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.