ஆசிட் வீசியவன் மீது துப்பாக்கிச் சூடு

பெங்களூர்: மே. 14 – இளம் பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய நாகேஷ் பாபு என்ற நாகேஷை துப்பாக்கியால் சுட்டு தக்க பாடம் கற்பித்துள்ள மேற்கு பிரிவு போலீசார் இனி எவரும் இது போன்ற ஆசிட் வீசும் செயல்களில் ஈடுபடக்கூடாதென்ற எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். சுங்கதகட்டே அருகில் இளம் பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய நாகேஷ் காலில் துப்பாக்கியால் சுட்டு இனி இதுபோன்ற குற்றங்களில் கை வைத்தால் தக்க தண்டனை கிடைக்கும் என சொல்லாமல் சொல்லியுள்ளனர். போலிஸாரின் குண்டடி வலது காலின் முட்டியில் பட்டு தீவிரமாக காயமடைந்துள்ள நாகேஷை பி ஜி எஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவந்தாலும் அவன் நிலைமை தீவிரமாய் இருப்பதாக நகர போலீஸ் ஆணையர் கமல் பந்த் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். குற்றவாளி தப்பித்துக்கொள்ள போலீசார் மீது கல் வீசி தாக்கியதால் காயமடைந்த காமாட்சிபால்யா தலைமை கான்ஸ்டபிள் மஹாதேவய்யாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ் நாட்டின் திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமத்தில் சாமியார் வேஷத்தில் இருந்த நாகேஷை நகரின் மேற்கு பிரிவு போலீசார் பக்தர் போல் மாறுவேடத்தில் சென்று கைது செய்து நள்ளிரவு நகருக்கு கொண்டு வந்துகொண்டிருந்தனர். வழியில் கெங்கேரி நைஸ் வீதி அருகில் நள்ளிரவு 1.30 மணியளவில் சிறுநீர் கழிக்க நிறுத்துமாறு குற்றவாளி கேட்டுள்ளான் . ஆனால் இதற்க்கு ஒப்புக்கொள்ளாத போலீசார் கெங்கேரி மேம்பாலம் அருகில் நிறுத்தினர். அப்போது நாகேஷ் போலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சித்துள்ளான். உடனே தலைமை கான்ஸ்டபிள் மஹாதேவய்யா நாகேஷை பிடிக்க ஓடியுள்ளார். ஆனால் அதற்குள் குற்றவாளி நாகேஷ் மஹாதேவய்யாவை கல்லால் தாக்கி தப்பித்துக்கொள்ள முயன்றபோது இன்ஸ்பெக்டர் ப்ரஷாந்ந் குற்றவாளியை கைது செய்ய வானம் நோக்கி சுட்டு அவனை எச்சரித்துள்ளார். ஆனாலும் நாகேஷ் பணியாமல் போலீசாரை தொடர்ந்து தாக்கி தப்பித்துக்கொள்ள முயன்றுள்ளான் . இதனால் போலீசார் அவனின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்து முதலுதவிக்காக ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக பி ஜி எஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அன்னபூர்ணேஸ்வரி நகரின் டி க்ரூப் லே அவுட்டில் வசித்து வந்த நாகேஷ் (34) இளம் பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய பின்னர் தலைமறைவானதுடன் அவனை கைது செய்ய போலீசார் 10 தனி படைகளை அமைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டனர். குற்றவாளி குறித்து சிறு தடயமும் கிடைக்காத காரணத்தால் கன்னடா , தெலுங்கு , தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குற்றவாளியின் புகைப்படத்தை அச்சடித்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு , ஆந்திரா , கேரளா ,தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் பொது இடங்களில் , கோயில்களில் ,ஆசிரமங்களில் , மடங்களில் என பொதுமக்கள் சேரும் இடங்களில் ஒட்டிவைத்தனர். போலிஸாரின் ஒரு குழு தமிழ் நாட்டின் திரும்வண்ணமாலையில் சிவன் கோயில் உள்ள ரமணர் ஆசிரமத்திலும் துண்டு பிரசுரத்தை ஒட்டி வைத்திருந்தனர். இந்த நோட்டீஸில் இருந்த புகைப்படத்தை பார்த்த உள்ளூர் வாசிகள் சில நாட்களாக ஆசிரமத்தில் காவி உடை அணிந்து உள்ள நாகேஷ் குறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் நேற்று மாலை பக்தர்கள் வேடத்தில் ஆசிரமத்திற்கு சென்று காவி உடையிலிருந்த நாகேஷின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினர். பின்னர் ஆசிரமத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நாகேஷ் குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் குற்றவாளியை தங்கள் வசம் எடுத்து அவனுடைய காவி உடைகளை களைந்து விசாரணை நடத்தியபோது நாகேஷின் நிஜ ஸ்வரூபம் தெரிய வந்தது. குற்றவாளி நாகேஷ் தன்னை காதலிக்குமாறு 25 வயது இளம் பெண்ணை வற்புறுத்தியுள்ளான். இவனுடைய காதலை புறக்கணித்த இளம் பெண் தன் பாட்டிற்கு தான் இருந்தாள் . எம் காம் பட்டதாரியான இளம் பெண் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். ஏப்ரல் 28 அன்று காலை சுங்கதகட்டேவில் உள்ள நிறுவனம் அருகில் வந்துள்ளாள். அப்போது ஆசிட் நிரப்பிய பாட்டிலுடன் திடீரென வந்த நாகேஷ் திடீரென இளம் பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டான்.