
லக்னோ, அக். 7- 2025 ஆசியக் கோப்பை தொடரில் ரிங்கு சிங் ஒரே ஒரு பந்தை மட்டுமே சந்தித்தார். இறுதிப் போட்டியின் கடைசி பந்தான அதில் பவுண்டரி அடித்து இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வென்று தந்தார். அந்த மகிழ்ச்சியில் இருந்த ரிங்கு சிங் இப்போது தனது சகோதரிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரைப் பரிசளித்து, பாசத்திலும் தான் ஒரு ‘ஃபினிஷர்’ என்பதை நிரூபித்துள்ளார். தனது சகோதரிக்கு அவர் பரிசளித்த ஸ்கூட்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை உருக வைத்துள்ளது. அவரது சகோதரியும் தனது நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் தன் தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்வித்து இருந்தார் ரிங்கு சிங். தற்போது தங்கையின் விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 2025 டி20 ஆசியக் கோப்பை தொடரில் ரிங்கு சிங்கிற்கு லீக் சுற்றிலும், சூப்பர் 4 சுற்றிலும் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி வரை வாட்டர் பாட்டில் தூக்க விட்டு விடுவார்களோ என நினைத்த நேரத்தில் தான் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்தியா வெற்றி பெற ஒரே ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த தொடரில் தனது முதல் பந்தை எதிர்கொண்டார் ரிங்கு சிங். அந்த ஒரே பந்தை பவுண்டரிக்கு விரட்டி, இந்தியாவிற்கு வெற்றியைப் பரிசளித்தார். இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான அலிகாருக்குத் திரும்பிய ரிங்கு சிங், தனது சகோதரி நேஹாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது சகோதரிக்கு, சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற ‘விடா விஎக்ஸ்2 பிளஸ் (Vida VX2 Plus)’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரிங்கு சிங் பரிசளித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை, நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாகப் பகிர்ந்து, “நன்றி ரிங்கு அண்ணா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரிங்கு சிங் தனது சகோதரியுடன் புதிய ஸ்கூட்டரில் அமர்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


















