ஆசிய பாரா விளையாட்டு: தங்கம் வென்றார் தமிழக வீரர்

ஹாங்சோ: அக். 28: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் தர்மராஜ் சோலைராஜ் தங்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் நீளம் தாண்டுதல் டி-64 பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தர்மராஜ் சோலைராஜ் 6.80 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார். இதேபிரிவில் இலங்கை வீரர் மத்தக கமாகே 6.68 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பான் வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
தங்கம் வென்ற தமிழக வீரர் தர்மராஜ் சோலை ராஜுக்கு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஷீத்தல் தேவிக்கு 2 தங்கம்: வில்வித்தைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி 2 தங்கங்களை வென்றுள்ளார். கடந்த வாரம் காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் தங்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளியும் ஷீத்தல் தேவி வென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் ஷீத்தல் தேவி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் 2 தங்கம், ஒரு வெள்ளி என 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த 16 வயதான ஷீத்தல் தேவி.துளசிமதி முருகேசன்: பாட்மிண்டன் மகளிர் எஸ்யு5 பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் துளசிமதி முருகேன் 21-19, 21-19 எனற செட் கணக்கில் சீனாவின் யாங் ஜியுஜியாவை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். துளசிமதி முருகேசன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இதே பிரிவில் இந்திய வீராங்கனை மணீஷா ராமதாஸ் வெண்கலம் வென்றார்.