ஆசிரியர்கள் கைது

சென்னை:அக். 5-
அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது.
இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர டிபிஐ வளாகத்தில் மற்றொரு பகுதியில் பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தை தொடர்வது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம் தொடரும்… கைது… –
அதேநேரம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, தங்கள் போராட்டத்தை தொடர்வதாக டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன.முன்னதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடைநிலை ஆசிரியர்களை நேற்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.