ஆஜராவதில் இருந்து சிதம்பரத்துக்கு விலக்கு


புதுடில்லி, ஏப். 8- ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2007ம் ஆண்டு, மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியில் இருந்தபோது, நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம், 305 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீடு பெற, அனுமதி அளித்து, முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. பின், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து, விசாரித்து வருகின்றன.
இதற்கிடையே, கடந்த மாதம், இந்த வழக்கில், அமலாக்கத் துறையினர், துணை குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின், சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆஜராகக்கோரி, டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிதம்பரம் மற்றும் கார்த்தி தரப்பு வழக்கறிஞர், நேற்று, சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் ஆஜரானார்.
அப்போது அவர் கூறுகையில், ”தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால், சிதம்பரம் மற்றும் கார்த்தி, நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. எனவே, அவர்களுக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, இருவருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, நீதிபதி உத்தரவிட்டார். பின், இந்த வழக்கு விசாரணை, வரும், 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.