ஆடி கிருத்திகை: வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சென்னை, ஆக. 9- தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று (புதன்கிழமை) ஆடிக்கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கிருத்திகையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது சகல நன்மையும் பெற்று தரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்று வருகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் 4 முனை சந்திப்பில் டிக்கெட் வழங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு, தெற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.