ஆடுகளம் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை; முன்னாள் வீரர்களுக்கு ரோகித் சர்மா பதிலடி


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குவதையொட்டி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2-வது டெஸ்ட் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் தன்மை குறித்து (முதல் நாளில் இருந்தே சுழலுக்கு சாதகம்) முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இரு அணியினரும் ஒரே ஆடுகளத்தில் தான் விளையாடினோம். எனவே ஆடுகளம் குறித்து ஏன் அதிகமாக விவாதிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. பல ஆண்டுகளாக இந்திய ஆடுகளங்கள் ஒரே மாதிரி தான் தயாரிக்கப்படுகிறது. எனவே அதில் மாற்றம் செய்ய வேண்டியது தேவையில்லை. ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் சூழலை சாதகமாக எடுத்துக் கொள்ள உரிமை உண்டு. நாங்கள் வெளிநாட்டுக்கு சென்று
விளையாடும் போது அவர்களும் அப்படி தான் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் எங்களை பற்றி நினைப்பதில்லை. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி நாங்கள் நினைக்க வேண்டும். எனவே ஆடுகளம் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள், அணி எப்படி செயல்படுகிறது, பேட்டிங், பந்து வீச்சு எப்படி இருக்கிறது என்ற வகையில் மட்டும் விவாதங்கள் இருக்க வேண்டும். இரு அணியினரும் ஒரே ஆடுகளத்தில் தான் விளையாடுகிறார்கள். சிறப்பாக ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள் அவ்வளவு தான்.
நான் இதுவரை ஒரே ஒரு பகல்-இரவு டெஸ்டில் தான் விளையாடி உள்ளேன். ஆனால் சூரியன் மறையும் அந்தி பொழுதில் பேட்டிங் செய்ததில்லை. சக வீரர்களிடம் பேசியதில் இருந்து அந்த சமயத்தில் தான் பேட்டிங் கொஞ்சம் சவாலாக இருக்கும் என்று அறிகிறேன். சீதோஷ்ண நிலையும், வெளிச்சமும் திடீரென மாறும். அப்போது கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் இந்த சூழல் தெரியும். எனவே சூழ்நிலைக்கு தக்கபடி விளையாட வேண்டியது முக்கியம்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.