ஆடு மேய்த்த பெண் புலி தாக்கி சாவு

மைசூர் : மே. 26 – ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது புலி ஒன்று திடீரென தாக்கி பெண்ணை கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் ஹெச் டி கோட்டே தாலூகாவின் மூரபாந்த் மலை அருகில் நேற்று மாலை நடந்துள்ளது. புலி இழுத்துச்சென்ற பெண்ணின் உடல் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கூண்டில் இன்று காலை கிடைத்துள்ளது. இந்த உடலை பார்த்து பெண்ணின் உறவினர்கள் கதறி அழுதனர். என் பேகூறு அருகில் உள்ள மூலத ஹாடி பகுயில் வசித்து வந்த சிக்கி (48) என்பவர் இந்த புலி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர். மூரபாந்த் மலை அருகில் இவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இவருடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த உதவியாளர் ஓடி சென்று கிராமத்தில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்திற்கு என் பேகூர் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலை முழுக்க பெண்னின் உடலை தேடியும் எங்கும் கிடைக்க வில்லை . பின்னர் இருட்டி விட்ட நிலையில் இன்று காலை வனப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கூண்டில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.