ஆட்சிக்கு வந்தால் விவசாயி நலனை பாதுகாப்போம்: ராகுல் உறுதி

புதுடெல்லி: மார்ச் 15:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று நடைபெற்ற யாத்திரையில் ராகுலுடன் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் பங்கேற்றனர்.
யாத்திரையின் நடுவே அங்கு விவசாயிகள் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் குரலாக ஒலிக்கும். விவசாயிகளின் நலனை பாதுகாக்க தேவையான கொள்கைகள் வகுக்கப்படும்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பயிர் செய்பவர்கள் பயனடையும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்படும். ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளால் விளைபொருட்களின் விலை பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டியிலிருந்து வேளாண்மைக்கு விலக்கு அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரத்து செய்துவிட்டது. இந்த தொகையைக் கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 24 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும்.முந்தைய யுபிஏ அரசு விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கோடி பயிர் கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மோடி அரசு, பயிர் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்படுகின்றன.எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல, விவசாயிகள் நாட்டு மக்களுக்கு உணவு வழங்குகிறார்கள். எனவே, ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நலனை பாதுகாக்காவிட்டால் நாடு முன்னேறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.