ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் வியூகம்

பெங்களூர்: ஜூன். 2 – ராஜஸ்தானின் உதய்பூரில் தேசிய காங்கிரஸ் நடத்திய சிந்தனா – மந்தனா முகாம் மாதிரியில் மாநில காங்கிரஸும் இன்று முதல் இரண்டு நாட்கள் புது கூட்டு சிந்தனா முகாமை நடத்தி வருகிறது. எதிர்வரும் தேர்தல்களுக்கு கட்சியை தயார் படுத்துவது குறித்து விவாதிக்க சிந்தனா -மந்தனா முகாம்  நடந்து வருகிறது. . பெங்களூரின் தேவனஹள்ளி அருகில் உள்ள ஒரு ரிசார்ட்டில்  தொடங்கிய  இந்த இரண்டு நாள் முகாமை காங்கிரசின் மாநில பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா துவக்கி வைத்தார். ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த சிந்தனா முகாமில் நடந்துள்ள விவாதங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை கவனத்தில்  கொண்டு மாநிலத்திலும் கட்சியின் ஒருங்கிணைப்பு , தேர்தல் தயாரிப்பு , மத்திய மற்றும் மாநில பி ஜே பி அரசுகளின் தோல்விகளை முன் வைத்து முன் வரும் நாட்களில் மாநிலம் முழுக்க நடத்தும் போராட்டங்களின் வழிமுறைகளை முடிவு செய்வது , கட்சி ஆட்சியை பிடிக்க தேவையான செயல் திட்டங்கள் வகுப்பது ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. எதிர் வரும் சட்டமன்ற தொகுதி தேர்தல்களை மனதிற்கொண்டு வெற்றிக்கு எந்த விதத்தில் வழிமுறைகளை கையாளவேண்டும் , கட்சி இனி செல்லும் பாதை எவ்விதத்தில் இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்கள் குறித்து இன்றைய சிந்தனா- மந்தனா முகாமில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட ஐநூறுக்கும் அதிகமான காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எம் எல் ஏக்கள் , எம்பிக்கள் மற்றும் கடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் , மற்றும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவு பிரமுகர்களும் பங்கு கொண்டுள்ளனர். தேசிய அளவில் நடந்த சிந்தனா- மந்தனா முகாமில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறை படுத்த மாநிலத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிதி விவகார குழுவிற்கு முன்னாள் மாநில முதல்வர் வீரப்ப மொய்லி  தலைவராகவும் , ராஜீவ் கௌடா செயல் தலைவராகவும் உள்ளார். சமூக நீதி மற்றும் நடைமுறை குழுவிற்கு ரெஹமான் கான் தலைவராக இருப்பதுடன் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவராக டி கே ஹரிப்ரசாத் பொறுப்பு ஏற்றிருப்பதுடன் விவசாய குழுவிற்கு எம் பி பாட்டில் தலைவராகவும் , இளைஞர்கள் , மகளிர் , கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவிற்கு கிருஷ்ணாபைரே கௌடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர இந்த குழுவிற்கு ஷரத் பச்சேகௌடா செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.