ஆட்சியை தக்க வைக்க பாஜக புதிய உத்தி

புதுடெல்லி: அக். 11-
மத்தியபிரதேசத்தில் தனது ஆட்சியை தக்கவைக்க பாஜகபுதிய உத்தியை பயன்படுத்துகிறது. இதன்படி தோல்வியுற்ற தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள், மற்றும் எம்.பி.க்களை போட்டியிட வைக்கிறது.
ம.பி.யில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி செய்கிறது. இங்கு நான்காவது முறையாக வென்று தனது ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. இதற்காக, அக்கட்சி வெளியிட்டுள்ள 2 வேட்பாளர்கள் பட்டியலில் 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை சுற்றியுள்ள தொகுதிகளிலும் தாக்கம் ஏற்பட்டு வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. இதில் மேலும் ஒரு புதிய அரசியல் உத்தியை பாஜக கையாளுகிறது.
இதன்படி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாம் தோல்வியுற்ற தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தனது எம்.பி.க்களை போட்டியிட வைக்கிறது. இதனால் தனது கையைவிட்டு நழுவிய தொகுதிகளில் இந்தமுறை வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. இவர்களுடன் தமது கட்சியின் தேசியத் தலைவர்கள் சிலரையும் தோல்விடைந்த தொகுதிகளில் பாஜக நிறுத்துகிறது. இதன்மூலம் உட்கட்சி பூசலையும் பாஜக தடுத்த நிறுத்த முயற்சிக்கிறது.
கடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் புதுமுகங்கள் பலருக்கு பாஜக வாய்ப்பளித்தது. இதன் பிறகு அங்கு 6-வது முறையாக வெற்றி பெற்று பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே குஜராத் அரசியல் சூத்திரத்தை ம.பி.யிலும் பாஜக அமலாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ம.பி.யில் நேற்று வெளியான ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் 24 மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக் களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகின்றனர்.ம.பி.யில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இந்தமுறை எவரும் முன்னிறுத்தப்படவில்லை. எனினும் நான்காவது முறையாக ம.பி. முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகானுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சவுகான் தனது புதினி தொகுதியில் போட்டியிடுகிறார். சபாநாயகர் கிரிஷ் கவுதம், கடந்த முறை வெற்றி பெற்ற தேவ்தலப்பில் போட்டியிடுகிறார். அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதால் ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வெற்றிக்காக பாஜக அதிக தீவிரம் காட்டி வருகிறது.