ஆதித்யா விண்கலத்தின் தரவுகள் வெளியீடு

சென்னை: பிப். 24: சூரியனின் கரோனா பகுதியில் இருந்து வெளியான ஆற்றலின் தாக்கத்தை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இது 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் ஜனவரி 6-ம் தேதி நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா,
போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் சூரியனில் வெளிப்புறப் பகுதியில் வெளியான ஆற்றலின் நிலையை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு; சூரிய புயல்கள் குறித்தும் அதிலுள்ள ஆற்றல் அயனிகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலத்தில் ‘பாபா’ எனும் பிளாஸ்மா பகுப்பாய்வு கருவி (Plasma Analyser Package for Aditya-PAPA) பொருத்தப்பட்டிருந்தது. இந்த கருவி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 10, 11-ம் தேதிகளில் கரோனா எனும் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் இருந்து அதிகளவு ஆற்றல் துகள்கள் வெளியானதை இது கண்டறிந்துள்ளது.
இதற்கான ஆய்வு தரவுகள் இஸ்ரோ வலைதளத்தில் (www.isro.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. ‘பாபா’ ஒரே கருவியாக இருந்தாலும் இதில் 2 சென்சார்கள் உள்ளன. இவை சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அதன் திசையை அளவிட பயன்படுகிறது. இதை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது.