ஆதி கருவண்ணராயர் கோவில் விழா
3 நாட்கள் நடக்கிறது

பவானிசாகர் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் விழா 3 நாட்கள் நடக்கிறது. ஆதிகருவண்ணராயர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹடா கிராமத்திற்கு செல்லும் வழியில் அடர்ந்த காட்டுக்குள் ஆதி கருவண்ணராயர், பொம்மா தேவி கோவில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த உப்பிலி நாயக்கர் என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு இக்கோவிலில் உள்ள சாமியும், அம்மனும் குலதெய்வங்களாக விளங்குகிறது.
மாசி பொங்கல் விழா இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பவுர்ணமியை ஒட்டிய 3 நாட்கள் பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த உப்பிலி நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வேன், லாரி, பஸ் மூலம் குடும்பத்துடன் இந்த கோவிலுக்கு வருவார்கள். அப்போது கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து ஆடு மற்றும் கோழி பலியிட்டு கோவில் வளாகத்தை சுற்றியுள்ள வனப்பகுதியிலேயே சமைத்து சாப்பிடுவார்கள்.
அதன்படி இந்த ஆண்டின் பொங்கல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை), 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. வனத்துறை கட்டுப்பாடு கெஜலெட்டி ஆதிகருவண்ணராயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வாகனங்களில் பக்தர்கள் செல்லும்போது காராச்சிகொரை வனப்பகுதி சோதனை சாவடியில் இருந்து கோவில் வரை இடையில் வனப்பகுதியில் யாரும் வாகனங்களை விட்டு கீழே இறங்க கூடாது. வனவிலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது. மது உள்ளிட்ட போதை பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது, வனப்பகுதியில் தீ பற்ற வைக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பவானிசாகர் வனத்துறையினர் விதித்துள்ளனர்.