ஆதீனங்கள் கருத்துக்கு தமிழ், வரலாற்று பேராசிரியர்கள் மறுப்பு

புதுடெல்லி, நவ. 25 –
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழக ஆதீனங்களின் பேட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், ஆன்மிக இலக்கியங்களால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததாக அவர்கள் கூறியிருந்தனர். இது தவறான கருத்து எனவும், 2004-ல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க சங்க இலக்கியங்களே காரணம் என்றும் தமிழ் மற்றும் வரலாற்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக பதவி வகித்த பேராசிரியர் க.ராமசாமி ‘இந்து தமிழ்திசை’ நாளிதழிடம் கூறும்போது, “தமிழுக்கு செம்மொழி அந்தஸ்துகிடைக்க சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சம்ஸ்கிருதம் படித்த தமிழ் அறிஞருமான ஜார்ஜ் எல். ஹார்ட் எழுதிய கடிதம் அடிப்படையானது.

இவர் மறைமலை இலக்குவனாருக்கு எழுதிய கடிதத்தில், செம்மொழி அந்தஸ்து அளிக்க அனைத்து வகையிலும் தகுதியானது தமிழ் எனக் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்களை கொண்ட மத்தியக்குழு அமைக்கப்பட்டு பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.
தமிழில் எழுதப்பட்ட தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு உள்ளிட்ட 41 சங்க இலக்கியங்கள் செவ்வியல் நூல்கள் என முடிவு செய்யப்பட்டன.