ஆந்திராவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியது

ஆந்திர: ஜன.20
பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும், ஒன்றிய அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர். அதோடு காங்கிரஸ் உள்பட பல மாநில கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் கூட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில், ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆந்திர அமைச்சர் சீனிவாச வேணுகோபால் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். முதலில் 139 பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மட்டும் கணக்கெடுக்க திட்டமிட்டு இருந்தோம். தற்போது அனைத்து பிரிவினரையும் கணக்கெடுக்க உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என்று கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து சாதியை சேர்ந்தவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இன்னும் முழுமையாக பெற முடியாத ஜாதிகள் பல உள்ளன.அவற்றை கண்டறிய இந்த கணக்கெடுப்பு பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், பிகாரைத் தொடர்ந்து 2வது மாநிலமாக ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தன்னார்வலர்களுடன் இணைந்து மாநில கிராமச் செயலக அமைப்பு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.