ஆந்திர அரசியலால் அல்லாடும் ஏனாம்: தயாராகும் கொல்லப்பள்ளி

புதுச்சேரி நவம்பர் 29- அரசியல்வாதிகளைப் போலவே அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் தான். காரணம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நில அமைப்பு அப்படி.இங்குள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழகத்தை ஒட்டியும், மாஹே கேரளத்தை ஒட்டியும், ஏனாம் ஆந்திரத்தை ஒட்டியும் அமைந்துள்ளன. ஏனாமில் தெலுங்கு பேசுவோரே அதிகம். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலில் புதுச்சேரி பிராந்தியத்தில் தட்டாஞ்சாவடியிலும் ஆந்திரம் அருகே உள்ள ஏனாமிலும்
போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி மக்கள் அவருக்கு வெற்றிக் கோப்பையை தந்த நிலையில், ஏனாம் மக்கள் அவரை வெறுங்கையோடு அனுப்பினார்கள்.முந்தைய காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமைச் சேர்ந்தவர். அந்த ஆட்சியின் கடைசி நேரத்தில் காங்கிரஸிலிருந்து
விலகிய அவர், என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்தார். இருந்த போதும் 2021-ல் தனது ஏனாம் தொகுதியில் தான் போட்டியிடாமல் ரங்கசாமியை போட்டியிட வைத்தார். ரங்கசாமிக்காக மல்லாடி எவ்வளவோ மன்றாடியும் அவரை அவரால் ஜெயிக்கவைக்க முடியவில்லை.சுயேச்சையாக போட்டியிட்ட கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்கிடம் தொகுதியை கோட்டைவிட்டார் ரங்கசாமி.. என்றபோதும் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசுக்கு தனது ஆதரவைத் தந்தார் கொல்லப்பள்ளியார். அதேபோல், தனது ஏனாம் சாரதியான மல்லாடியை டெல்லிக்கு சிறப்புப் பிரதிநிதியாக அனுப்பி சிறப்பு செய்தார் ரங்கசாமி.