ஆன்லைனில் 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி மோசடி

புதுடில்லி, ஜூன் 10- ஆன்லைன் லோன் ஆப் மூலம் இரண்டு மாதங்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 11 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். டில்லி துணை போலீஸ் கமிஷனர் (சைபர் செல்) அனீஷ் ராய் தெரிவித்துள்ளதாவது: ‘பவர் பேங்க்’ மற்றும் ஈ.இசட்.பிளான் (Power Bank and EZPlan) ஆகிய இரண்டு மொபைல் ஆப்கள் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றை நாங்கள் கண்காணிக்கத் துவங்கினோம். பவர் பேங்க் பெங்களூருவை தளமாகக் கொண்டது. ஆனால் அதன் சேவையகம் சீனாவை மையமாகக் கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த ஆன்லைன் ஆப், மக்களை அதில் அதிக பணம் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு, ஆரம்பத்தில் முதலீடு செய்த பணத்தில், 5 முதல் 10 சதவீதம் வரை ஒரு சிறிய தொகையை திரும்பக் கொடுத்துள்ளது.
இதையடுத்து அதை நம்பிய 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ரூ.150 கோடிக்கு மேல் அதில் முதலீடு செய்துள்ளனர். நாங்கள் அதில் ஒரு தொகையை முதலீடு செய்து பண மோசடியைக் கண்டறிந்தோம். வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை ஆய்வு செய்ததில், ஜூன் 2ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை செய்ததில், மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.பொது மக்கள் ஆன்லைன் லோன் ஆப் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏமாற்றப்பட்டால் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.