ஆப்கானிஸ்தானுடன் இலங்கை மோதல்

புனே, அக். 30 – உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கியமான ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் இலங்கை அணி மோதவுள்ளது. இந்தப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்குகிறது. இந்தப் போட்டி இலங்கைக்கு முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால் இலங்கை வீரர்கள் உயர்மட்ட திறனை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். இலங்கை அணியின் பதும் நிசங்கா, குஷால் பெரேரா, கேப்டன் குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமாக, சரித் அசலங்கா,தனஞ்செய டி சில்வா ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெளிப்படக்கூடும்.அதைப் போலவே பந்துவீச்சில் தில்ஷன் மதுஷங்கா, ரஜிதா, மகேஷ் திக்சனா, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர்எதிரணிக்கு சவால் விடக் காத்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து சிறப்பான பந்துவீச்சு வெளிப்படும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானை அந்த அணி எளிதில் வெல்லக்கூடும். இந்த உலகக் கோப்பையில் மதுஷங்கா இதுவரை 11 க்கெட்களைக்கைப்பற்றியுள்ளார். அதேபோல் ரஜிதாவும் 7 விக்கெட்களை வேட்டையாடியுள்ளார். இவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறக்கூடும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள நிலையில் களம்காண்கிறது. அந்த அணி இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளை அதிர்ச்சித் தோல்வியுறச்செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதைப் போலவே இலங்கை அணியையும் அந்த அணி வீழ்த்தினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பேட்டிங்கில் ரஹ்மனுல்லா குர்பாஸ்,இப்ராஹிம் ஸத்ரன், ரஹ்மத் ஷா, கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் இவர்கள் நால்வருமே அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். எனவே இவர்களிடமிருந்து மேலும் ஒரு அபாரமான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.பவுலிங்கில் ரஷித் கான், நவீன் உல் ஹக், முஜீப், நபி, அஸ்மத்துல்லா, நூர்அகமது ஆகியோரும் எதிரணியை மிரட்டிவருகின்றனர். இலங்கைக்கு எதிரானபோட்டியிலும் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகும். புனேவிலுள்ள எம்சிஏ ஸ்டேடியம், ரன் குவிப்புக்கு ஏற்ற மைதானமாக உள்ளது. இந்தப் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.