ஆப்கானிஸ்தான் ஜிந்தபாத்

சென்னை: அக்டோபர் .24 நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியை உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர் ஆப்கன் மக்கள்.
கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தி இருந்தது ஆப்கன். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அந்த நாட்டின் தலைநகர் காபூலில் ஒன்று கூடி கொண்டாடினர் அந்நாட்டு மக்கள். வீதிகளில் திரண்ட மக்கள் ‘ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டனர்.
“இது அற்புதமான வெற்றி. ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். நாங்கள் உலகக் கோப்பையை வென்றதை விடவும் உற்சாகமான உணர்வை இந்த வெற்றி தருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை வீழ்த்தியது உண்மையிலேயே அற்புதமான வெற்றி” என சென்னையில் போட்டியை பார்த்த ஆப்கன் ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
“எங்கள் அணியின் முன்னேற்றத்தை இந்த வெற்றி குறிக்கிறது. எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என நான் நம்புகிறேன். இந்த வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார் ஆட்ட நாயகன் இப்ராஹிம் ஸத்ரான். நாட்டு மக்களை குறித்து எண்ணும் அவருக்கு எனது நன்றி. இந்த வெற்றி உலகக் கோப்பையை வென்றதுக்கு இணையானது. இந்த வெற்றியை நாங்கள் தொடருவோம். வரும் நாட்களில் மேலும் பல போட்டிகளில் வெல்வோம். எங்கள் அணி சிறப்பாக உள்ளது” என போட்டியை நேரில் பார்த்த மற்றொரு ஆப்கன் ரசிகர் தெரிவித்துள்ளார்.