ஆப்கானுக்கு கோதுமை அனுப்ப இந்தியாவுக்கு பாக்., அனுமதி

இஸ்லாமாபாத், நவ. 25- இந்தியா, 50 ஆயிரம் டன் கோதுமையை, ஆப்கனுக்கு பாக்., வழியாக அனுப்ப, அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் ஆட்சி அமைந்த பின், உணவுப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் ஆப்கனுக்கு, 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதாக இந்தியா அறிவித்தது. தற்போது, ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கு பாக்., வழியே பொருட்களை அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா பாக்., வழியே ஆப்கனுக்கு பொருட்கள் அனுப்ப அனுமதி இல்லை.
அதனால், ஆப்கன் மக்களுக்கு, பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியே கோதுமை அனுப்ப அனுமதிக்குமாறு பாக்.,கை இந்தியா கேட்டுக் கொண்டது. அதுபோல, ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர் அமிர் கான் முத்தகியும், இந்தியா பாக்., வழியே கோதுமை அனுப்ப அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் நேற்று வாகா எல்லை வழியே ஆப்கனுக்கு கோதுமை அனுப்ப அனுமதிக்கப்படும்; இது குறித்த தகவல், இந்திய வெளியுறவு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என பாக்., பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியா விரைவில் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை ஆப்கனுக்கு அனுப்பும் என, தெரிகிறது.