ஆப்பிள் போனை வாங்க மறுக்கும் சீனர்கள்

பீஜிங், மார்ச் 13- புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் டெஸ்லா சீனாவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்து நஷ்டமடைந்து வருவது தெரிய வந்துள்ளது. ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற அமெரிக்க நிறுவனங்களின் முக்கியமான சந்தை சீனா. இந்நிலையில் திடீரென சீன மக்கள் ஆப்பிள் போன் மற்றும் டெஸ்லா கார்கள் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர். சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற போக்கு அதிகரித்துள்ளது. எனவே மக்கள் உள்நாட்டு நிறுவனங்களின் போன் மற்றும் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஐபோன் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடை: சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பேசிய கட்சியின் முக்கிய நபரான ஜான் வென்லாங், மக்கள் முடிந்த அளவு ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஐபோன்கள் சீனாவிலேயே தயாரிக்கப்படுகிறது என்றாலும் அதில் பயன்படுத்தப்படும் சிப்கள் பாதுகாப்பானவை என்பதில் நம்பிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் ஐபோன்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே சீன நிறுவனமான ஹூவேயின் போன்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீனாவின் ஹூவேய் போனை பயன்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தடை விதித்தது. தற்போது அதுவே சீனாவிலும் நடைபெறுகிறது. தள்ளுபடி விலையில் விற்பனை: சீனா அரசு அலுவலகங்களில் ஹூவெய் நிறுவனங்கள் முகவர்கள் நேரடியாக சென்று 20% தள்ளுபடியுடன் போன்களை விற்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள பள்ளிகளில் , சீன நிறுவன போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் , உள்நாட்டு பொருட்களின் பயன்பாடு குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.