ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்

கோவை: ஜன. 9: பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொழில் மற்றும் வேலை காரணமாக கோவையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். சொகுசு பயணம் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் பலரும் ஆம்னி பேருந்துகளை நாடு கின்றனர்.
கோவை காந்திபுரத்திலுள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பொன்னமராவதி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கும், திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி போன்ற வெளி மாநில நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கின்றனர். அதிகபட்சமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூருவுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், கோவையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால், 3 மடங்கு, 4 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதை தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.