
கர்னுால், அக். 27- ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில் அதிகாலையில், ‘ஏசி’ ஆம்னி பஸ் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம் செய்தவர்கள் உட்பட, 20 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் லேப்டாப், மொபைல் போன், செருப்பு உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களால், பஸ்சின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதேபோல கடந்த, 14ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஆம்னி பஸ், ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 பேர் இறந்தனர். இப்படி ஆம்னி பஸ்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.















