ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி, ஏப். 3- டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா, பிரசன்னா பி.வரலே ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் விசாரணை இல்லாமல் அல்லது லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் ரூ.2 கோடி கைப்பற்றப்படாமல் சஞ்சய் சிங்கை ஏன் 6 மாதங்களுக்கும் மேலாக சிறையில்வைத்திருக்க வேண்டும்? என அமலாக்கத் துறையிடம் கேள்வி எழுப்பினர். “லஞ்சம் பெற்றதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணையில் கூட நீங்கள் ஆராயலாம்” என்றும் தெரிவித்தனர். இதற்கு இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “விசாரணை நீதிமன்றம் நிர்ணயிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள சலுகையை மற்ற வழக்கில் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாது. சஞ்சய் சிங் தனது அரசியல் செயல்பாடுகளை தொடர அனுமதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள முதல் ஆம் ஆத்மி தலைவராகியுள்ளார் சஞ்சய்சிங். மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள்சிறையில் உள்ள நிலையில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அக்கட்சிக்கு ஆறுதலாக பார்க்கப்படுகிறது.