ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம்

திருவாரூர்/ ஜன. 9: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சிகாரணமாக டெல்டா, கடலூர்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பொறையாறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர். மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலை, பாபுராஜபுரம், திருப்புறம்பியம், நீலத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்துள்ளன. மேலும், 3 ஓட்டு வீடுகள், 12 கூரை வீடுகள் பகுதியாக இடிந்து சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விஜயபுரம் தாய்சேய் நல மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்ததால், அங்கிருந்த நோயாளிகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.