ஆயுதங்கள் கொள்ளை – சிபிஐ குற்றப்பத்திரிக்கை

புதுடெல்லி: மார்ச் 4:
மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது, 2023 ஆக.3-ம் தேதி பிஷ்ணுபூர் காவல் நிலைய ஆயுதக் கிடங்கில்இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சிலர் நேற்று தகவல் தெரிவித்தனர்.
அசாமின் குவாஹாத்தியில் உள்ள கம்ரூப்பின் (மெட்ரோ) தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. சிபிஐயின் குற்றப்பத்திரிகையில், லைஷ்ராம் பிரேம் சிங், குமுக்சம் திரன் என்கிற தப்கா, மொய்ரங்தேம் ஆனந்த் சிங், அதோக்பம் கஜித் என்கிற கிஷோர்ஜித், லவுக்ரக்பம் மைக்கேல் மங்காங்சா என்கிற மைக்கேல், கோந்தவுஜம் ரோமோஜித் மைத்தேயி என்கிற ரோமோஜித், கெய்ஷம் ஜான்சன் என்ற ஜான்சன் ஆகிய ஏழு பெயர்கள் இடம்பிடித்துள்ளது.
மத்திய புலனாய்வு முகமை மணிப்பூர் கலவரம் தொடர்பாக 27 வழக்குகளை விசாரித்து வருகிறது.
இதில் 19 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்புடையது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 219 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கி கூறியதாவது: மணிப்பூர் இனக்கலவரத்தின் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களில் மணிப்பூர் மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மணிப்பூரில் இருந்து இடம்பெயர்ந் துள்ளனர். இதுபோக மாநில அரசு ரூ.800 கோடிவரை நஷ்ட மடைந்துள்ளது. சட்ட ஒழுங்கை காப்பாற்ற 198 மத்திய ஆயுத போலீஸ் படைகள் மற்றும் 140 ராணுவப்படைகள் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக இதுவரை 10 ஆயிரம் பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,87,143 பேர் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆளுநர் அனுசுயா உய்கி கூறினார்.