ஆயுதங்கள் கொள்ளை

மணிப்பூர் ஆக.4- மாநிலம் பிஷ்னுபுர் மாவட்டத்தில் இரண்டு பாதுகாப்பு செக்போஸ்ட்-ஐ சூறையாடிய கும்பல் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
கெய்ரென்பாபி, தங்கலாவை போலீஸ் செக்போஸ்ட்-ஐ ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய கும்பல் சூறையாடி, ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளனர். மேலும், ஹெயிங்கங் மற்றும சிங்ஜமெய் காவல் நிலையத்தில் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், வீரர்கள் அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தினர். கவுட்ருக், ஹராயேதெல், சென்ஜம் சிராங் பகுதியில் ஆயுதம் ஏந்தியவர்களுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும், அதில் வீரர் ஒருவர் உள்பட இருவர் காயம் அடைந்துள்ளனர்.
மேற்கு இம்பாலில் உள்ள சென்ஜாம் சிராங் பகுதியில் போலீஸ் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். பிஷ்னுபுர்- சுரசந்த்புர் மாவட்ட எல்லையில் 500 முதல் 600 பேர் கூடியதால், போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது 25 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை கும்பல் ஒன்று கூடுவது போன்ற ஆங்காங்கே சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், பதட்டமான நிலை தொடர்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் வன்முறையை தொடர்ந்து 127 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வன்முறை தொடர்பாக 1047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.